பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஏப்ரல் 25ல் துவங்கும் தேர்வுகள், மே 31 வரை நடக்கின்றன. மொத்தம் 26 லட்சம் மாணவர் - மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். அதோடு கூட, அடுத்த கல்வியாண்டுக்கு, வகுப்புகள் துவங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வும் நடத்தவில்லை. இந்த ஆண்டு தேர்வுகள் நடக்குமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், பொது தேர்வுகள் நடக்கும் தேதி மற்றும் முடிவுகள் வெளியாகும் தேதிகளை, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்., 25ல் பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் துவங்கி, மே 31 வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்வில், ஒன்பது லட்சம் பேர்; பிளஸ் 1ல், 8.49 லட்சம்; பிளஸ் 2வில், 8.36 லட்சம் பேர் என, மொத்தம், 25.85 லட்சம் பேர் பொது தேர்வுகள் எழுத உள்ளனர். ஜூன் 20ல் பள்ளி திறப்புபொது தேர்வு அல்லாத, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 13க்குள் தேர்வுகளை நடத்தி, மே 14 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மே 13 கடைசி வேலை நாளாக, அறிவிக்கப்பட்டுள்ளது. பின், புதிய கல்வி ஆண்டில், ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 1க்கு, ஜூன் 24ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் சேர்வதற்கு, ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வு எழுத வேண்டும். இதற்கான இரண்டாம் கட்ட தேர்வு, மே 24 முதல், 29 வரை நடக்கிறது.
எனவே, ஜே.இ.இ., தேர்வில் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்கும் வகையில், கணித பிரிவு மாணவர்களுக்கு மட்டும், மே 23க்குள் அனைத்து பாடத் தேர்வுகளும் முடியும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு விபரங்களை, www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பாடம் வாரியாக தேர்வு அட்டவணை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல் 1:15 மணிக்கு முடிகின்றன. பாட வாரியாக தேர்வு நடக்கும் அட்டவணை விபரம்:
* பிளஸ் 2 பொது தேர்வு
தேதி கிழமை பாடம்
மே 5, வியாழன் மொழிப்பாடம்
மே 9, திங்கள் ஆங்கிலம்
மே 11, புதன் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறை மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி செயல்முறைகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி - தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
மே 13, வெள்ளி வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்
மே 17, செவ்வாய் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, துணி நுால் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்வி
மே 20, வெள்ளி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
மே 23, திங்கள் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின் இன்ஜினியரிங், மின்னணு இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநுால் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
மே, 28 சனிக்கிழமை தொழிற்கல்வி பாடங்கள்-
* பிளஸ் 1 பொது தேர்வு
தேதி கிழமை பாடம்
மே, 10, செவ்வாய் மொழிப்பாடம்
மே, 12, வியாழன் ஆங்கிலம்
மே, 16, திங்கள் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின் இன்ஜினியரிங், மின்னணு இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநுால் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
மே, 19, வியாழன் வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்
மே, 25, புதன் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, துணி நுால் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்வி
மே, 27, வெள்ளி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறை மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி செயல்முறைகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி - தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
மே, 31, செவ்வாய் இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்-
* 10ம் வகுப்பு பொது தேர்வு
தேதி கிழமை பாடம்
மே 6, வெள்ளி மொழிப்பாடம்
மே 14, சனி விருப்ப மொழி
மே 18, புதன் ஆங்கிலம்
மே 21, சனி தொழிற்கல்வி
மே 24, செவ்வாய் கணிதம்
மே 26, வியாழன் அறிவியல்
மே 30, திங்கள் சமூக அறிவியல்