• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     வாழ்வை வளமாக்கும் ஆடிப்பெருக்கு

    தி கோவை டைம்ஸ்


    ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மன் கோயில்களும் பக்தி பாடல்களும் தான். ஆடிக் காற்று, ஆடித்தள்ளுபடி போன்றவையும் இம் மாதத்திற்கு உரிய சிறப்பு. இவற்றுக்கெல்லாம் முதன்மையாக நமக்கு நினைவில் வருவது ஆடிப் பதினெட்டு என்ற ஆடிப்பெருக்கு திருநாள். ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த 2022 ஆண்டில் ஆகஸ்ட் 3 புதன்கிழமை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. நம் இந்திய பெரு நாட்டில் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். 

    இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்து இயற்கையை கடவுளாக பாவித்து வழிபடும் பல பண்டிகைகள் நம் நாட்டில் பழங்காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதுபோலத்தான் இந்த ஆடிப் பெருக்கு திருநாளும். எந்த பண்டிகையாக இருந்தாலும் அது கொண்டாடப்படும் காரணம் அறிந்து கொண்டாடினால் நமக்கு மன திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். ஆடிப்பெருக்கின் முக்கியத்துவத்தை இப்போது பார்க்கலாம்.

    ஆடி மாதத்தின் சிறப்புகள்:

    ·         ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது இந்த மாதத்தில் செய்யும் பூஜைகள், வழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள், மந்திர பாராயணங்கள் சிறந்த பலனை நமக்கு அளிக்கும்.

    ·         ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். விவசாயத்தில் விதை விதைப்பதற்கு ஏற்ற மாதம் ஆடி மாதம்.

    ·         இந்த மாதத்தில் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். அதனால் ஆடி மாதம் அம்மனுக்கு அதிக ஆற்றல் இருக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகத் தான் ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோயில்கள் அனைத்திலும் வழிபாடுகள் மிக விசேஷமாக நடைபெறுகிறது. பூமாதேவி பிறந்தது இந்த ஆடி மாதத்தில் தான், மலையரசன் மகளாக பார்வதி பிறந்ததும் இந்த ஆடி மாதத்தில் தான், மதுரை மீனாட்சியம்மன் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.



    ·         ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, ஆடி பூரம், ஆடிப் பவுர்ணமி ,ஆடி வெள்ளி, ஆடி அம்மாவாசை மற்றும் செவ்வாய் கிழமைகள், புதுமணத் தம்பதியருக்கு ஆடிப் பால் அளிப்பது , சங்கரன்கோவில் ஆடித்தபசு ,குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதரித்த நாள் என பல விசேஷ நாட்கள் உள்ளது ஆடி மாதம்.

    ·         ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக் குளிஎன்பது பழமொழி. ஆம் ஆடி மாதத்தில் வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு காரணமும் உண்டு.

    ·         ஆடி மாதம் மழைக்காலம் தொடங்குவதற்கு ஆரம்ப காலம் ஆகும். ஆகவே மாதத்தில் பரவும் தொற்று நோய்களிலிருந்து காக்க மஞ்சளும், வேப்பிலையும் எல்லா கோயில்களிலும் பயன்படுத்தப்படும், பிரசாதங்களிளும் கலந்து அளிக்கப்படும். வெயில் குறைவாக இருப்பதால் உண்ணும் உணவு எளிதாக செரிக்க வேண்டும் என்பதற்காக ஆடி மாதங்களில் கோயில்கள் தோறும் கூழ் அளிக்கப்படும்.

    ·         ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் நீராடுவதும் வழக்கமாக இருந்தது. இதனால் வீட்டில் மங்களம் தங்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

     


    ஆடிப்பெருக்கு:

    வாழ்வின் வளம் பெருக்கும் ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.பொதுவாக நம் தாய்த் தமிழ்நாட்டில் ஆடி மாதம்தான் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படும். இதன் மூலம் பயிர்கள் செழித்து விவசாயம் பெருகி, மக்கள் அனைவரும் வளமான வாழ்வு வாழ பொங்கி வரும் காவேரி நதியை பெண்ணாக அதாவது கடவுளாக பாவித்து, மனதார வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் நாட்டில் நீர் வளம் குன்றாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் காவிரி கரை கொண்ட மாவட்டங்கள் பலவற்றில் இந்த ஆடி 18 பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் காவிரி அன்னையை வணங்கும் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவனையும், திருமணமான பெண்களின் கணவனின் நலத்தை காவிரித்தாய் காப்பாள் என்று நம் முன்னோர்கள் கருதினர்.

    ஆடி பதினெட்டு தொடங்கும் 10 நாட்களுக்கு முன்னரே நவதானியங்களை தூவி, மண் மற்றும் எரு கலந்து அதை முளைக்க வைத்து முளைப்பாரி எடுப்பார்கள். இந்த முளைப்பாரியை பகலில் ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் சுத்தமான இடத்தில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, முளைப்பாரியையும் வைத்து, பச்சரிசி, சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்த பாத்திரத்தை வைத்து வணங்குவர். பின்னர் வயதான சுமங்கலி ஒருவர் அங்கு கூடியுள்ள சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் நூலை வழங்குவார். பின்னர் அவரவர் கொண்டு வந்த முளைப்பாரி களை கும்மி அடித்து, குலவையிட்டு ஆற்றில் விடுவர். இவ்வாறு ஆற்றில் விடப்படும் நவதானியங்கள் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு நிலப்பகுதிகளில் சென்று செழித்து வளர்ந்து அந்த நிலத்தை வளமாக்கும் என்பது ஐதீகம்.



    பெண்கள் காவிரி ஆற்றின் படித்துறையில் பிள்ளையார் செய்து , விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, நைவேத்தியம் படைத்து, சூடம் காட்டி பூஜை செய்வர். ஏற்கனவே அணிந்திருந்த தாலிக்கயிற்றை நீரில் விட்டு, பூஜையில் வைத்த தாலிக்கயிற்றை சுமங்கலிகள் அணிந்து கொள்வர். மேலும் பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் நூல் மற்றும் கயிறை ஆண்கள் வலது கரத்திலும், கன்னிப்பெண்கள் கழுத்திலும் அணிந்து கொள்வர்.

    சின்னஞ்சிறுமிகளும், கன்னிமார்களும், பெண்களும் ஆற்றங்கரையில் கூடி ,தலை வாழை இலையில் கருகுமணி, பூச்சரம், வாழைப்பழம், நாவல்பழம் எலுமிச்சைதாம்பூலம், வளையல்கள், காப்பரிசி இவற்றையெல்லாம் படைத்து, தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்கி மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வர். பின்னர் தீபங்களை நீரில் மிதக்க விடுவர். சிலர் வாழை மட்டையில் விளக்கேற்றி மிதக்க விடுவர் இந்தக் காட்சியை பார்ப்பவர்களுக்கு பரவசம் அளித்து மெய்சிலிர்க்க வைக்கும். விழாவின் இறுதியில் பிள்ளையாருக்கு படைக்கப்பட்ட பச்சரிசி கலவை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படும். சிலர் தமக்கு விருப்பமான உணவுகளை கொண்டுவந்து பிரசாதமாக ஆற்றங்கரையில் அமர்ந்து உண்ணுவர். ஆடிப்பெருக்கு பெண்களுக்கு பெருவாழ்வு தரும் மங்கல நிகழ்ச்சியாகும். விவசாயிகளுக்கு நல்வாழ்வு கொடுக்கும் பெருநாளாகும். ஆகவே அனைவரும் இந்நாளை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வாழ்வில் எல்லா சிறப்புகளும், வளங்களும் பெற்று வாழ வேண்டும்.



     

    A call-to-action text Contact us