முழுப்பெயர்
: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
பெற்றோர்:
கரம்சந்த் காந்தி - புத்திலிபாய்
பிறப்பிடம்
: போர்பந்தர், குஜராத்.
தேசியம் :
இந்தியன்
தொழில் :
வழக்கறிஞர், காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதி
கட்சி :
இந்திய தேசிய காங்கிரஸ்
காலம் : 1869 - 1948
மகாத்மா காந்தி
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"
என்றார்
வள்ளுவப் பெருந்தகை. இந்த குறளிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய்
வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள். வாய்மை, தூய்மை, எளிமை, நேர்மை
ஆகிய அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாக வாழ்ந்தவர் தான் நம் தேசத்தந்தை
காந்தியடிகள். இத்தகைய உயர்ந்த மகாத்மாவை பற்றிய கட்டுரையே இது. இக்கட்டுரையில்
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு - Gandhi History in Tamil
பிறப்பு
மகாத்மா
காந்தி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற ஊரில் 1869 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அன்று பிறந்தார். இவரது தந்தையாரது பெயர் கரம்சந்த்
காந்தி மற்றும் இவரது தாயாரின் பெயர் புத்திலிபாய் ஆகும்.
குடும்ப வாழ்க்கை
1983ஆம் ஆண்டு வெறும் 13 வயதான
குழந்தைப் பருவத்திலேயே கஸ்தூரி பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் காந்தி.
காந்தியடிகளுக்கு ஹரிலால் காந்தி, மணிலால் காந்தி, தேவதாஸ்
காந்தி, ராம்தாஸ் காந்தி என நான்கு மகன்கள் இருந்தனர்.
கல்வியும் இளமையும் |
பள்ளிப்படிப்பை
முடித்தவுடன் காந்தியடிகள் இங்கிலாந்து நாட்டிற்கு சட்டப்படிப்பு
படிக்க சென்றார். அங்கு பாரிஸ்டர்
பட்டம் பெற்ற காந்தியடிகள் இந்தியா திரும்பினார்.
பின்னர் சிறிது காலம் கழித்து இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றார்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறியால் கருப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு
அவர்களது உரிமைகள் அனைத்துமே பறிக்கப்பட்டன. அப்போது காந்தியடிகள் கருப்பின மக்களுக்கு
ஆதரவாக அவர்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக
போராடினார். பிறகு 1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து மீண்டும்
இந்தியா திரும்பினார் மகாத்மா காந்தி.
இருவகை
புரட்சி
ஒரே
காலத்தில் காந்தியடிகள் இருவகையான புரட்சிகளை செய்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து
அரசியல் புரட்சி செய்த அதே வேளையில் இந்திய மக்களிடத்திலும் சமூக சீர்திருத்த
புரட்சிகளையும் செய்தார் காந்தி. இந்த இரண்டு வகையான புரட்சிகளையும் அற வழியிலேயே
செய்தார் அவர். "ஆங்கிலேயர்களிடம் இருக்கும் துப்பாக்கியை கண்டு அஞ்சாதே, அறத்தின்
வழி நின்று எதிர்த்து நில், ஆங்கிலப் படை வீரர்கள் தாக்கினால் தாங்கிக்
கொள், எதிர்த்து தாக்காதே, கைது
செய்தால் மனமகிழ்வோடு செல், மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு
தூக்குக் கயிற்றின் முன் செல்" என்றார் காந்தியடிகள்.

"தீண்டாமை வேண்டாம்!பெண்ணடிமை பெருங்குற்றம்!
சாதி மதங்கள் வேதனை தருவன! மற வழி மரண வழி! கள்ளுண்டல் நஞ்சுண்டல்! கோழைத்தனம்
கூடாது! சோம்பல் அடிமைத்தனம்!" மகாத்மா
காந்தியின் புரட்சிகர சிந்தனைகள்.
காந்தியின்
உயர்ந்த பண்புகள்
அகிம்சை, எளிமை, ஏழைகளின்
மீது அன்பு, தன்னல மறுப்பு, எதிரியையும்
மன்னிக்கும் பரந்த உள்ளம் ஆகியவை காந்தியடிகளின் உயர்ந்த பண்புகளாக இருந்தன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களின் மீது அதிகப் பற்று கொண்டவராக
காந்தியடிகள் திகழ்ந்தார். உலகிலேயே கத்தியின்றி, ரத்தமின்றி
யுத்தம் ஒன்றை கண்டுபிடித்து அந்நியரை விரட்டியடித்த ஒரே தலைவர் நம் தேசத்தந்தை
காந்தியடிகள் மட்டுமே. காலம் தவறாமல் இருத்தல், மாமிச உணவை
உண்ணாமல் இருத்தல், பொய்மையை முழுவதும் தவிர்த்து வாய்மையை
கடைபிடித்தல் என்பனவும் காந்தியடிகளின் போற்றத்தக்க உயரிய பண்புகளாகும்.

காந்தியடிகளின் அகிம்சை போராட்டம் |
நம்
இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக
காந்தியடிகள் ஆயுதமின்றி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடினார். இந்தியர்களை
ஒன்றிணைத்து அவர் நடத்திய அறவழிப் போராட்டங்கள் ஆங்கிலேயரை அதிரச் செய்தன. 'உப்புக்
காய்ச்சும் அறப்போர்', ஆங்கிலேய அரசுக்கு வரி கொடுப்பதை நிறுத்தி 'வரிகொடா
இயக்கம்', ஆங்கில அரசுக்கு ஒத்துழைக்காமல் 'ஒத்துழையாமை
இயக்கம்', இளைஞர்களை வழிகெடுத்து வைத்திருந்த கடைகளுக்கு
எதிராக கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுப் பொருள் புறக்கணித்து சுதேசி
பொருட்களையே பயன்படுத்துதல், தனிநபர் அறப்போர், உண்ணா
விரதம் போன்ற அறவழி போராட்டங்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தியடிகள்
நடத்தினார். "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு
எதிராக இந்தியர்களை ஒன்றிணைத்து அறவழியில் புரட்சி செய்து நம் இந்திய நாட்டிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தந்தார் நம்
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள்.
காந்தியடிகளின் பொன்மொழிகள்
துணிவு
இல்லையேல் வாய்மை இல்லை, வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.
வீரம்
உடலின் ஆற்றல் அல்ல உள்ளத்தின் பண்பு.
ஒருவர்
துன்பப்படும்போது நிபந்தனையின்றி உதவுவதே நட்பு.
எவன்
ஒருவன் தனக்குள்ளே மனக் கட்டுப்பாடுகளை உருவாக்கி கொள்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்.
மற்றவர்களை
கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாக ஆகிவிட முடியாது.
கண் பார்வை
அற்றவன் குருடன் அல்ல தன் குறைகளை உணராதவனே குருடன்.
நீங்கள்
எது செய்தாலும் உங்கள் இல்லத்துக்கும் உலகிற்கும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பது ஒருபோதும்
கிடையாது.

மறைவு
1948ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி
இந்தியாவின் விடுதலைக்காக தன் வாழ்நாளில் அறவழி போராட்டங்கள் நடத்தி சுதந்திரம்
வாங்கித்தந்த நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மகாத்மா
காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து கௌரவித்தது. அவரிடமிருந்து அவரது உயர்ந்த பண்புகளான பகைவரிடம் அன்பு பாராட்டுதல், வாய்மை போன்றவற்றை நாமும் பின்பற்றுவது மிகவும்
அவசியமான ஒன்றாகும். காந்தியடிகள் மறைந்தாலும் உலகமெங்கும் அகிம்சையின் அடையாளமாக
இன்றும் அவர் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.