• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    புரட்சி என்றால் பகத்சிங்



    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார்.

    புரட்சியாளர் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பகத்சிங்தான். ஆம். தன்னுடைய கடைசி மூச்சின்போதும் தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூக்கில் தொங்கி சொந்த மண்ணில் கால்படாமல் சாவதை விரும்பாத அவர், துப்பாக்கிக் குண்டு ஏந்தி உயிரிழக்கத் தயாராக இருந்தார். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையைப் பற்றி மட்டுமே நினைத்தார்.

     


    1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு மாமாக்கள் சிறையிலிருந்து வெளியான சிறந்த நாளாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த கிசன் சிங் தன் மகனுக்கு பகத் சிங் என்று பெயரிட்டார். பகத் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்.

    இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

     


    இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919-ல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார். 14-வது வயதில் 'வந்தே மாதரம்' என்று காகிதத்தில் எழுதி, அந்தக் காகிதங்களைக் கொண்டுபோய் சுவர்களில் ஒட்டுகிறார் பகத்சிங்.

    காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணினார். தோழர்களுடன் இணைந்து `இந்தியக் குடியரசு சங்கம்’ (Hindustan Republic Association) எனும் அமைப்பில் ஒருவராக இணைகிறார். பின்னர், `நவஜவான் பாரத் சபை' என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார்.

     


    `விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது, ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது, மதவாதப் போக்குகளற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது' போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்படத் தொடங்கினர்.



    'நமது இறுதி லட்சியம் சோசலிசம்' என்பதை வலியுறுத்திய பகத்சிங், 1928 செப்டம்பர் 8, 9-ம் தேதிகளில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்' (HRSA) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார்.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங். சைமன் கமிஷனில் சட்டவரையறை கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராடினர். இதில், பிரிட்டிஷ் போலீஸார் தடியடி நடத்த உத்தரவிட, அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார்.



    இதனால், கோபமடைந்த புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்காட்டை கொல்வதற்குப் பதிலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டோஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர். பின்னர், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து குண்டுவீச்சில் ஈடுபட்டனர். சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்.

    அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதமாகத்தான் தூக்கு மேடை வந்தார். ``ஒரு புரட்சியாளர் இன்னொரு புரட்சியாளருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். வந்து விடுகிறேன்’’ என்று அவர் கூறும்போது, அவர் கையிலிருந்தது லெனினின் `அரசும் புரட்சியும்நூல்.

    அவரது இறப்பு, பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. இறப்பதற்கு முன் தன்னுடைய அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில், ``என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். நீங்கள் அழுது என்னைக் கஷ்டப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அழக் கூடாது. என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய புரட்சியாளராக இருந்ததால் இவர், சாஹீத் பகத் சிங் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.



    வெறும் 23 வருடம் வாழ்ந்த பகத்சிங்கை, மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. அவருடைய புரட்சி, சுதந்திரப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது. அவரை, நிராகரித்துவிட்டு வரலாற்றை யாராலும் பேசிவிட முடியாது. அவரைப் பற்றி எழுத்துகளில் இருப்பதைவிடவும் எழுதப்படாமல் போனதே அதிகம்.

     


    A call-to-action text Contact us