MIT கல்லூரி பட்டதாரி.. தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சர்.. யார் இந்த பழனிவேல் தியாகராஜன்..?

7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில் ஸ்டாலின் உட்படச் சுமார் 34 பேர் தமிழ்நாட்டின் முக்கியத் துறைகளின் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
இந்த 34 பேரில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர் நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ள பழனிவேல் தியாகராஜன் தான்.
காரணம் தமிழ்நாட்டின் கடன் அளவு கடந்த சில வருடங்களாக மிகவும் மேசமான நிலையில் உள்ளது. இந்த நிலையை மாற்றவும், அதேவேளையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இப்பதவியில் மிகவும் திறன் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது.
அப்படிப் பார்த்தால் பழனிவேல் தியாகராஜன்-ஐ நிதியமைச்சராக நியமித்த மு.க.ஸ்டாலின் அவர்களின் முடிவு மிகவும் சரியானது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா..?!
தமிழ்நாட்டின் கடன் அளவு எப்போதும் அல்லாத அளவிற்குத் தற்போது 4 லட்சம் கோடி ரூபாய் அளவை தாண்டியுள்ள இந்த வேளையில், கொரோனா தொற்று மூலம் பல தொழிற்துறை, வர்த்தகத் துறை தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஒரு திறமையான நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்குக் கட்டாயம் தேவை.
இந்த வகையில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதியமைச்சராக அமெரிக்காவின் MIT ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பைனான்ஸ் பிரிவில் MBA பட்டம் பெற்ற பழனிவேல் தியாகராஜன்-ஐ நியமித்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் 1987ல் திருச்சி NIT கல்லூரியில் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பின், அமெரிக்காவின் பிரபலமான Buffalo பல்கலைக்கழகத்தில் MS மற்றும் Phd பட்டம் பெற்றார். இதன் பின்பே MIT கல்லூரியில் MBA பட்டம் பெற்றார்.
படிப்பை முடிந்த பழனிவேல் தியாகராஜன் லெமேன் பிரதர்ஸ் நிறுவனத்தில் சுமார் 7 வருடம் பணியார் ஆப்ஷோர் கேட்டல் மார்கெட்ஸ் பிரிவின் தலைவராக இருந்தார், இதன் பின்பு ஸ்டாண்டர்ட் சார்ட்டெட் வங்கியின் நிதியியல் சந்தை பிரிவில் பல உயர் பதவிகளில் பணியாற்றியவர்.
ஒருப்பக்கம் நிதி துறை குறித்த அனுபவம், நிர்வாகத் திறமை எனப் பழனிவேல் தியாகராஜன் வலிமையாக இருக்கும் இதேவேளையில், மறுபுறம் தமிழக அரசியல் களத்திற்கும் இவரது குடும்பத்திற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.
நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரன் மற்றும் தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் மகன் தான் தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன்.
20 ஆண்டுகள் சர்வதேச நிதியியல் துறை மற்றும் மனிதவள பிரிவில் பல தலைமை பொறுப்புகளிலிருந்த பழனிவேல் தியாகராஜன் 2014 முதல் தனது பணியிலிருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கினார். கடந்த முறை போலவே இத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் திமுக-வின் ஐடி விங் பிரிவின் நிறுவன செயலாளராக உள்ளார். தொழில்நுட்பம், நிதியியல் துறை, வெளிநாட்டுச் சந்தைகள், தொழிற்துறை என நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான அனைத்து துறைகளிலும் அனுபவம் உள்ளவராகப் பழனிவேல் தியாகராஜன் இருக்கும் காரணத்தால் தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள வேலாண்மைத் துறை அமைச்சராகப் பதவியேற்கச் சரியானவர் என நம்பப்படுகிறது