ஆக்சிஜன் சிலிண்டரை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்?
டில்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள டில்லியில் வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலரியா ஆக்சிஜன் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இந்தியாவில் அதிகரித்து வருவதன் காரணமாக 24 மணிநேரமும் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இயங்கி வருகின்றன. ஆக்சிஜன் கான்ஸன்டிரேட்டர் கருவிகள் கொண்டு இவை தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விமானங்கள், சாலை வாகனங்கள் மூலமாக கொண்டு சேர்க்கப்படுகின்றன. இவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நோயாளிகளின் கடமை என்று ரன்தீப் அறிவுறுத்தியுள்ளார்.
ஆக்சிஜனை வீணடிக்காதீர்
ஆக்சிஜன் சிலிண்டர்களை விலைகொடுத்து வாங்கி வீட்டிலேயே பயன்படுத்தும் நிலை தற்போது வந்துவிட்டது. இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது எனத் தெரியாமல் அதிக ஆக்ஸிஜனை நோயாளிகள் வீணடிப்பதாக அவர் கூறியுள்ளார். உடலில் தேவையான ஆக்ஸிஜன் உள்ளதா, இல்லையா என்று சோதிக்கும் கருவி மூலம் நாம் உடலை சோதித்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் செயற்கை ஆக்சிஜனின் தேவை இருக்கும் எனவும் போதுமான அளவு ஆக்சிஜன் நுரையீரலில் இருக்கும்போது அது தேவைப்படாது என்றும் கூறியுள்ளார். நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கும் கருவியில் 92, 93, 94 அளவு ஆக்சிஜன் உள்ளதாக காட்டினால் பயப்படத் தேவையில்லை என்றும் செயற்கை ஆக்ஸிஜன் அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தவிர்ப்பது அவசியம்
மேலும் செயற்கை ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டிருக்கும் நோயாளிகள் பலர் மருத்துவமனையில் செய்யும் தவறு என்னவென்றால் சாப்பிடும்போது ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்தாமல் அவற்றை முகத்தில் இருந்து கழட்டி வைத்துவிட்டு உணவு உட்கொள்கின்றன. இதனால் ஒரு நாளில் அதிக ஆக்சிஜன் வீணடிக்கப்படுகிறது. இதனை நோயாளிகள் தவிர்ப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.