இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் - பெண்கள்!
இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் பணியாற்ற, 100 பெண்கள் வெற்றிகரமாக தங்களது பயிற்சிகளை முதல் முறையாக, முடித்துள்ளனர்.
ராணுவத்தில், கப்பல் மற்றும் விமான படையில் பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், சிப்பாய் பிரிவில் இதுவரை இல்லாமல் இருந்தனர்.
'காஷ்மீர் போன்ற இடங்களில், ராணுவத்திற்கு எதிராக பெண்கள், திருப்பி விடப்படும் போது, அவர்களை, ராணுவ வீரர்கள் சமாளிப்பது, சவாலான காரியம்.இச்சமயங்களில், நம் ராணுவத்தில், பெண்கள் பிரிவும் இருந்தால் நன்றாக இருக்கும்...' என, ராணுவ அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
இதற்கு, பிரதமர் மோடி, ஒப்புதல் அளித்ததையடுத்து, முதல் கட்டமாக, 100 பெண்களை, சிப்பாய் பிரிவில் சேர்க்கும் நடவடிக்கை துவங்கியது.
இதற்கு, பிரதமர் மோடி, ஒப்புதல் அளித்ததையடுத்து, முதல் கட்டமாக, 100 பெண்களை, சிப்பாய் பிரிவில் சேர்க்கும் நடவடிக்கை துவங்கியது.
நாடு முழுவதிலுமிருந்து, 18 - 21 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2 லட்சம் பெண்கள், ராணுவத்தில் பணியாற்ற விண்ணப்பித்தனர். தகுதி அடிப்படையில், 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, 62 வாரங்கள், பெங்களூருவில் உள்ள மிலிட்டரி பள்ளியில், கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது. காலை, 5:20 மணிக்கு ஆரம்பிக்கும் பயிற்சி, இரவு, 7:40க்கு தான் முடியும்.
ஆண்களைப் போல, தலைமுடி வெட்டப்பட்டது. மொபைல் போன் கிடையாது. வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே குடும்பத்தாருடன் பேச அனுமதி என்ற, ராணுவ கட்டுப்பாடுகளுடன் நடந்த பயிற்சியை, வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
தற்போது, பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆண் சிப்பாய்களுக்கு நிகரான சம்பளம், சலுகை, பதவி உயர்வு அனைத்தும் வழங்கப்படும்.
பயிற்சி முடித்து, ராணுவ உடையில், கம்பீரத்துடன் வீட்டிற்கு வந்த மகள்களை பார்த்ததும், அடையாளம் தெரியாமல் திணறினர், குடும்பத்தார். பின்னர், நாட்டிற்கு, ஒரு வீர மகளை கொடுத்த மகிழ்ச்சியில், திளைத்தனர்.
விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், செவிலியர் மற்றும் ஆசிரியை என்று, பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்கள், இந்த சிப்பாய் படை பிரிவிலும் சாதிப்பது நிச்சயம்.