அக்டோபர் 5:
இன்று வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள்
***************
இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.
ஆன்மீகவாதி என்று ஒரு வட்டத்திற்குள் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை அடக்கிவிட முடியாது.
வள்ளலாருக்கு இலக்கியவாதி, சொற்பொழிவாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சித்த மருத்துவர், ஜீவகாருண்யர், தீர்க்கதரிசி, ரசவாத வித்தகர் என்று இன்னபிற முகங்களும் உண்டு.
அன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும். கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார்.
பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலம் சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி, ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் நீங்கி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடு பட்டார்.
சாதி, மத,சாஸ்திரங்களால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் கண்டு கண்டித்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் பேசிய வள்ளலார், எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார்.
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..'’ என்று மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்காகவும் மனம் உருகினார். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்.
பசியால் வாடுவோரின் பசி தீர்க்க அன்று அவர் மூட்டிய தீ இன்றும் அணையாஅடுப்பாக எரிந்துகொண்டிருக்கிறது வடலூரில்.
அவரின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் பலரும் அன்னதானம் செய்து வருகிறார்கள்.
தமிழ் வித்வான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று பல பரிமாணங்களைக் காட்டியவர் வள்ளலார்.
இவர் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் மறைந்தார்.
சாதி, மதங்களையும் மூடப்பழக்கத்தையும் முதலீடாக வைத்து பிழைக்கும் சனாதனிகள் அவரை தீ வைத்து கொன்று விட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்று பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைத்து விட்டார்கள்.
வாழ்க அவரது புகழ்!
வளர்க அவர் பரப்பிய மனிதாபிமானம்.!