நெல்லை: தென் மாவட்டங்களில் பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி,
தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாகவே கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் ஒரே நாளில் நடந்து இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கொலை சம்பவங்கள் பெரும்பாலும் கூலிப்படைகள் மூலமே நிகழ்த்தப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை
நெல்லை அருகே கீழசெவல் நயினார்குளம் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி சங்கர சுப்பிரமணியன் அப்பகுதியுள்ள டாஸ்மாக் கடை அருகே தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது மட்டுமின்றி சங்கர சுப்பிரமணியத்தின் தலையை அந்த கூலிப் படையினர் கோபாலசமுத்திரம் பகுதியில் மந்திரம் என்பவரது கல்லறையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழிக்குப் பழி
இது பழிக்குப் பழி வாங்க நடத்தப்பட்ட படுகொலையாகும்,. இப்படி பழிக்குப்பழி வாங்கும் விதமாக நெல்லை, தென்காசி போன்ற தெற்கு மாவட்டங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இப்படித் தொடர்ந்து அதிகரிக்கும் கூலிப் படையினர் கலாச்சாரத்தைத் தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆப்ரேஷன் டிஸ்ஆர்ம்
இந்தச் சூழலில் அதிகரிக்கும் ரவுடிகள் கலாசாரத்தை ஒடுக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் "ஆப்ரேஷன் டிஸ்ஆர்ம்' (Operation Disarm) என்ற சிறப்பு ஆப்ரேஷன் செயல்படுத்தப்பட்டது. இதில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், நெல்லை மாநகர காவல்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் போலீசாருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நடவடிக்கை தொடரும் முன்னதாக இன்று காலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தென் மண்டல ஐஜி அன்பு, மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் நடந்த கொலை சம்பவங்களுக்குப் பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே நெல்லையில் மற்றும் திண்டுக்கல்லில் படுகொலை நடந்துள்ளதாகவும் இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.