*ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்திற்கு பின்னர் வரும் அஷ்டமி திதியை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.*
அந்த வகையில் நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்த நாளை ஆகஸ்ட் 30 ம் தேதி இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது, குட்டி கிருஷ்ணனும், குட்டி ராதையும் தான். அதோடு, குழந்தைகளுக்கு குட்டி கிருஷ்ணரைப் போல வேடமிடுவது, அவரை வீட்டுக்கு அழைப்பது போல பாத சுவடுகள் போடுவது ஆகியவையும் தான். என கொண்டாடப்படுகின்றது.
*எப்படி விரதம் இருப்பது?*
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபடலாம். இந்த தினத்தில் விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபாடு செய்திட மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் தீரும். மழலைச் செல்வம் மட்டுமல்ல அள்ளக் குறையாத கல்வி, ஆரோக்கியம், பொருட் செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.
விரதவேளைகளில் பழங்கள், பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். இயலாதவர்கள் அரிசியால் செய்ததைத் தவிர வேறு உணவை உண்ணலாம்.கிருஷ்ணர் பிறந்த போது வசுதேவர்- தேவகி மற்றும் சந்திரன் மட்டுமே விழித்திருந்தனர். இதனால் கிருஷ்ண ஜெயந்தி பூஜையான சூரியன் மறைந்த பின்னர், மாலை நேரத்தில் செய்வதே சாலச் சிறந்தது.
வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணனின் புகைப்படம் அல்லது விக்கிரகம், சிலை இதில் ஏதாவது ஒன்றை பூஜை செய்வதற்கு முன்னர் நன்கு சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இடலாம். ஒரு வாழை இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காய் கலசம் வைக்கலாம்.
அத்துடன் கிருஷ்ணனுக்கு உகந்த பாடல்கள், மந்திரங்களைச் சொல்லலாம். குறைந்தது கிருஷ்ணர் மற்றும் ராதைக்கான காயத்ரி மந்திரங்களை சொல்லலாம்.
*கிருஷ்ண காயத்ரி:*
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.
*ராதா காயத்ரி

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.
பூஜை முடிந்ததும் கிருஷ்ணருக்கு படைத்த பலகாரங்களை அருகில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்த பிறகு வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம். பூஜை முடிந்த பின்னர் சந்திரனை பார்த்து வணங்குவதால் சிறப்பான பலன்களை பெறலாம். அத்துடன் கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை, சிறுவர், சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்விக்காக இயன்ற அளவு உதவி செய்திட நம் வாழ்வில் உள்ள எல்லா மனக்குறைகளும் நீக்கி, மகிழ்ச்சியான நிறைவான வாழ்வு அமையும்.