• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     

    கொரோனா காலத்தில் நிறைய அன்பு உள்ளங்களை பார்க்கமுடிகிறது. அதில் ஒருவராக மிளிர்கிறார், ஜெயமேரி. விருதுநகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான இவர், கொரோனா ஊரடங்கு காலங்களில் மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுப்பதுடன், வயிறாற உணவு வழங்குகிறார். அவர் இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். 

     * உங்களை பற்றிய சிறு அறிமுகம் ? 

     2004-ம் ஆண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியையாக கல்விப்பணி ஆற்றுகிறேன். கற்பித்தலில் பல புதுமைகளை முயன்றிருக்கிறேன். திருக்குறள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட பல புதுமையான விளையாட்டுகளையும், முயற்சிகளையும் முயன்றிருக்கிறேன். குறிப்பாக ‘ஒரு குறளுக்கு, ஒரு ரூபாய்' என்ற முயற்சியின் மூலம் மாணவர்களை தினம் ஒரு திருக்குறளை ஒப்புவிக்க வைத்து, அதற்கு சன்மானமாக ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறேன். திருக்குறளோடு விளக்கத்தையும் கூறுபவர்களுக்கு 2 ரூபாய் கொடுத்து ஊக்கமளித்திருக்கிறேன். 2-ம் வகுப்பு மாணவிகள் இருவரை திருக்குறள் ஒப்புவிக்கவைத்து, சாதனை படைத்திருக்கிறேன். என்னுடைய ஆசிரியர் பணியை சிறப்பிக்கும் விதமாக, தமிழக அரசின் ‘கனவு ஆசிரியை’ விருது 2018-ம் ஆண்டு கிடைத்தது. 

     * பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் சிந்தனை எப்படி வந்தது? 

     நான் பணியாற்றும் அரசு பள்ளியில் பெரும்பாலும், ஏழை மாணவர்களே கல்வி பயில்கிறார்கள். பெரும்பாலும் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளே அதிகமாக கல்வி பயில்கிறார்கள். சத்துணவை நம்பி பள்ளிக்கு வரும் அவர்களுக்கு, நான் காலை நேர இணை உணவுகளை வழங்கி வந்தேன். அதாவது, காலை 11 மணிக்கு உண்ணக்கூடிய வகையில் சிறுதானிய லட்டு, ரொட்டி போன்றவற்றை தயாரித்து, கடந்த பல வருடங்களாகவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில், கொரோனா பேரிடர் ஏழை குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி விட்டது. அவர்களுக்கு சத்துணவு கூட கிடைக்காத சூழலில்தான், உணவு சமைத்து கொடுக்க ஆசைப்பட்டேன். 




     * எப்போதிலிருந்து உணவு வழங்குகிறீர்கள்? 

     கொரோனா பேரிடர் தொடங்கிய, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை உணவுகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறேன். என் பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு அவரவர் வீடு தேடி சென்று உணவு பொட்டலங்களை வழங்குகிறேன். குழந்தைகள் மட்டுமின்றி, ஒருசில பெற்றோர்களுக்கும், அவர்களது சுற்றத்தாருக்கும் உணவு வழங்கி வருகிறேன். மேலும் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிற பள்ளி குழந்தைகளுக்கும் மதிய உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறேன். 

     * நெருக்கடியான காலகட்டத்தில் உணவு தயாரிப்பதும், வீடுகளுக்கு சென்று உணவு வழங்குவதும் சிரமமாக இல்லையா? 

     நெருக்கடி இல்லாத காலகட்டத்திலேயே அந்த ஏழை குழந்தைகள் உணவு உண்பது சிரமமான விஷயம். அப்படி இருக்கையில், கொரோனா நெருக்கடியும், வேலைவாய்ப்பின்மையும் அவர்களது உணவை கேள்விக் குறியாக்கிவிட்டது. அவர்களது நிலையை விட, என்னுடைய முயற்சி சிரமமாக தெரியவில்லை. அதனால்தான் துணிந்து இறங்கினேன். 

     * கொரோனா ஊரடங்கில் உணவு தயாரித்ததையும், கிராமங்களுக்கு எடுத்து சென்று உணவு பரிமாறியதையும் கூறுங்கள்? என்னுடைய எண்ணத்தை, குடும்பத்தினர் ஆதரிக்கவே, வீட்டில் உணவு தயாரிக்க ஆரம்பித்தேன். பிறகு என் நண்பர்கள்-தோழிகளின் உதவியும் கிடைக்க தொடங்கியது. பல நல்ல உள்ளங்களின் ஆதரவும் கிடைக்கவே, உணவு வழங்கும் பணி தங்கு தடையின்றி நடக்கிறது. கடுமையான ஊரடங்கு காலத்திலும் என் வீட்டில் உணவு பொருட்களும் தயாராகிவிடும். ஆனால் போலீஸ் கெடுபிடிகளால் அதை பல கிராமங்களுக்கு கொண்டு சென்று, மாணவர்களுக்கு வழங்குவதுதான் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. இருப்பினும் பல தடைகளை தாண்டி, ஏழை மாணவர்களுக்கான உணவை கொண்டு சேர்த்தோம். 

     * வீட்டிலேயே பள்ளி ஆரம்பித்ததை பற்றி கூறுங்கள்? 

     கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்த என் வீட்டிலேயே எளிமையான கல்விக்கூடத்தை உருவாக்கினேன். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளி மாணவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, என் வீட்டில் கல்வி புகட்டினேன். அதோடு வீட்டிலேயே மிக எளிமையான புத்தக நிலையம் ஒன்றை அமைத்து, மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை ஊட்டினேன். மேலும் என் வீட்டில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், காலை-மதியம்-இரவு என மூன்று வேளையும் உணவு வழங்குகிறேன். 

     * உங்களது முயற்சியில் தடைகளை எதிர்கொண்ட அனுபவத்தை கூறுங்கள்? 

     நோய்த் தொற்று காலத்தில் குழந்தைகளை சந்திப்பதை முன்வைத்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம், நானும் நோய்த் தொற்றுக்கு ஆளாகிவிடுவேனோ என நிறைய பேர் என்னை எச்சரித்து, விமர்சித்தார்கள். இதை கடப்பதுதான் கடினமாக இருந்தது. மற்றபடி எல்லாமே சுமூகமாக அரங்கேறியது. நல்ல வேளையாக, இப்போது வரை கொரோனாவிடம் இருந்து தள்ளியே இருக்கிறேன்.* உங்களுடைய லட்சியம் என்ன? பசி இல்லாத படித்த சமூகத்தை உருவாக்குவதுதான் என்னுடைய லட்சியம். 

     * ஊரடங்கு காலத்தில் பள்ளிக்குழந்தைகளை எப்படி வழிநடத்துவது? 

     நமக்கு தெரிந்த விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அது வாய்ப்பாடாககூட இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுங்கள். 

     * நெகிழவைத்த தருணம் எது? 

    சாப்பாடு ஏற்றி செல்லும் வண்டியை பார்த்ததுமே, ஏழை குழந்தைகளின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. அந்த மகிழ்ச்சியும், அவர்களின் சந்தோஷமும் என்னை தினந்தோறும் நெகிழ வைக்கிறது. அதேபோல, ஒரு நாள் உணவுகளை ஏற்றிக்கொண்டு கிராமங்களுக்கு சென்றிருந்தேன். அப்போது, எல்லா குடும்பங்களும் பணத்தை சேர்த்து எனக்காக ஒரு பட்டு சேலை வாங்கி பரிசளித்தனர். அந்த கிராமம் மட்டுமின்றி, நான் உணவு வழங்கிய எல்லா கிராமங்களிலும் இதுபோன்ற நெகிழவைக்கும் பரிசுகள் கிடைத்தன. ‘கவுரவ விருது' கிடைத்திருந்தாலும்கூட, இதுபோன்ற நெகிழ்ச்சி கிடைத்திருக்காது.
    A call-to-action text Contact us