கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’.
இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது.
கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார். அவர் கனவில் பழநி ஆண்டவர் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில் ஒரு குன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அருகே என் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அங்கே வந்து என்னைத் தரிசிக்கவும்,’ எனக் கூறினார்.
அதன்படி கோப்பண மன்றாடியார் அத்திருப்பாதங்களுக்கு பூஜையும் உற்சவமும் நடத்தி வந்தார். இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் கோயில் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத வள்ளி சுனை (தீர்த்தம்) உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது.
திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலின் உள்ளே, வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டுகிறார். ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பிரதான சந்நதியின் தென்பகுதியில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சந்நதிகள் அமைந்துள்ளன. கோயிலின் பின்புறம் முருகன் பாதம் பதிந்த பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர்.
கோவை-பொள்ளாச்சி பாதையில் கோவையிலிருந்து 23வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கிணத்துக்கடவு.