தமிழகத்தில், கன ஜோராக சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கான மாதிரி புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் கோவை மாநகரில், வெள்ளலூரில் சுமார் 6 வருடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் இந்தஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான திட்டம் சுமார் 168 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட இருக்கிறது.
இந்த 60 ஏக்கர் பரப்பளவிலான பேருந்து நிலையம், கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது. பி அண்ட் சி கட்டுமான நிறுவனம் சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டமைப்பு பணிகள் நடத்துவதற்கு ஒப்பந்த அனுமதியும்வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாக இருக்கும் பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லும் பகுதி, இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், பேருந்துகள் நிறுத்தப்படவுள்ள இடம், பயணிகள் பயன்படுத்துவதற்கென தனியே பூங்கா, ஆம்னி பேருந்துகள், டவுன்பஸ்கள் நிற்கும் பகுதியின் மாதிரி தோற்றம் என வெளியான மாதிரி படத்தில் கண்ணை கவரும் வகையில் அனைத்தும் பிரம்மாண்டமாக இடம் பெற்றுள்ளது.
கடந்த 2014ம் வருடம் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த பேருந்து நிலைய திட்டம் சுமார் 6 ஆண்டுகள்காத்திருப்பிற்கு பின்னர் துவக்கப்படவுள்ளது. இந்த பேருந்து நிலைய திட்டம் கோவை மாநகரின் கட்டமைப்பை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 140 பேருந்துகள் வரையில் நிறுத்தி வைக்கும் கையிலான ரேக், 33 நகர டவுன்பஸ்கள் நிறுத்த பஸ் பே, 80 ஆம்னி பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்கப்படவுள்ளது.
இவை தவிர, பேருந்து நிலையத்திற்குள் சுமார் 71 கடைகள் கொண்ட வணிக வளாகமும் தனியே உருவாக்கப்படவுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் மூலமாக தினமும் சுமார் ஆயிரம் பேருந்துகள் வரையில் இயக்கப்படும் என்றும், இப்படி பேருந்துகளை நிறுத்துவதற்காக மட்டும் 30 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு வழியாக திருச்சி ரோடு, அவினாசி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டிற்கு எளிதாக வாகனங்கள் சென்று வர முடியும். கோவை நகரில் சுகுணாபுரம் பகுதியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்க சர்வே பணிகள் நடத்தப்பட்டது.
அவினாசி ரோட்டில் 9.7 கி.மீ தூரத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எலிவேட்டர் காரிடார் என்ற பெயரில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கு விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது. நகரில் உக்கடம் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பொள்ளாச்சி ரோடு 26 கி.மீ தூரத்திற்கு கான்கீரிட் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவை நகரின் நெரிசல், இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் பணி துவக்கப்படவுள்ளது. நகர், புறநகருக்கு பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பைபாஸ் ரோட்டில் பொதுமக்கள் எளிதாக சென்று வர வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் மையமாக அமையும்.