வரலாற்றில் இதே ஜனவரி 23 (1957)
மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது தான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. எனவே தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு இதே சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது. 1957-57ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வரவு செலவு திட்டம் முதன் முதலாக தமிழில் வழங்கப்பட்டது.
அப்படி ஆட்சி மொழித் தகுதி அளிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர் அதனை களைவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1957ம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழி அமல்படுத்தும் குழுவை ஏற்படுத்தினார். இவர்கள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம் பற்றி ஆய்வு செய்து அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து ஆய்வின் போதே அறிவுறைகளை கூறி குறைகளைக் களைந்து அகராதியில் இல்லாத சொற்களுக்கு இணையான தமிழ் தேவைப்படும் இடங்களில் உடனுக்குடன் எடுத்துரைத்தனர். மற்றும் தாங்கள் சொல்லுகின்ற அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எளிய அலுவலகத் தமிழ்ச் சொற்களை கோர்த்து ஆட்சிச் சொல் அகராதியை ஏற்படுத்தினர்.
எல்லத் துறைகளிலும் உபயோகிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு துறைக்கும் தமிழ் ஆட்சி மொழி அகராதியும் அதற்கு இணையான ஆங்கிலச் சொல் அகராதியும் வெளியிடப்பட்டு, அனைத்து அரசுத் துறைகளுக்கும் வழங்கப்பட்டது. அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழ்த் தட்ட்ச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டதோடு தட்டச்சர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எல்லாச் சட்டங்களும் தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இப்போது உலகில் ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.
அதே சமயம் இப்போது தமிழ் பேச்சு மொழியாகக் கூட இல்லை என்பது வேதனை.
வாழ்க தமிழ் !