#பில்கேட்ஸ் வெற்றிக்கு #துணையாய் இருந்தது இந்த '6' !
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தான் பில்கேட்ஸ் (William Henry Bill Gates). மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவராவர். இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.
பில் கேட்ஸ் இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். பில் கேட்ஸின் “த ரோட் அகெட்' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலிலும், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட்" என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வலையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 23 வருடங்களில் 18 வருடங்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தவர். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் முழுக்க முழுக்க தனது சொந்த முயற்சியால் இந்த இடத்தை அடைந்தவர். பெரும் செல்வந்தனாக வலம்வர 6 பழக்கங்கள் காரணமாக அமைந்ததாக குறிப்பிடுக்கிறார்.
1. வெற்றிக்கான சக்தியை வைத்திருங்கள்
உங்கள் முயற்சியில் தோல்விகள் வரலாம் அவற்றை எதிர்கொள்ள உங்களிடம் மன தைரியமும் சக்தியும் இருக்கவேண்டும் என்கின்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தபோது அந்த நிறுவனம் திவாலாகிவிடும் நிலை தோன்றியதாகவும், இருப்பினும் தானும் தனது நண்பனும் என்ன நடந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை மூடுவதில்லை என்பதில் விடாப்பிடியாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
2. வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைக்காது
வாழ்வில் சரியான வாய்ப்புக்கள் அடிக்கடி வராது. அவை வரும்போது நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்"
"நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை ஆரம்பிப்பதாக இருந்தால் எனது படிப்பைப் பாதியில் விடவேண்டியிருந்தது. உலகிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகத்தை மற்றும் படிப்பைப் பாதியில் விடுவது முட்டாள் தனமாகத் தோன்றினாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்க அதுவே சரியான நேரமாக இருந்தது. எனவே எனது படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். வாழ்வில் சரியான வாய்ப்புக்கள் அடிக்கடி வராது. அவை வரும்போது நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கின்றார்.
3. கடினமாக உழையுங்கள்
கடின உழைப்பே வெற்றிக்கான வழி. இதனையே அனைத்து வெற்றியாளர்களும் குறிப்பிடுகின்றார்கள். பில்கேட்ஸ்-ம் அதற்கு விதிவிலக்கல்ல. இது குறித்து அவர் குறிப்பிடும்போது.
"மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தபோது நாங்கள் இரவு பகலாக வேலைசெய்தோம். வருடம் முழுக்க வாடிக்கையாளர்களை சந்திப்பதிலும், மென்பொருட்களை வடிவமைப்பதிலுமே செலவு செய்வோம். வருடத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே நான் ஒய்வு எடுத்து, அதை வெளி இடங்களில் செலவு செய்வேன்" என்கின்றார்.
4. அறிவுரைகள் கேளுங்கள்
"உங்களுக்கென நம்பிக்கையான ஒரு சிறு குழுவை வைத்திருங்கள். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுங்கள்" என்கின்றார். நீங்கள் அனைவரிடமும் அறிவுரை கேட்கவேண்டிய அவசியமில்லை, நீங்கள் நம்பும் ஒரு சிலரிடம் மட்டும் கேட்டால் போதுமானது.
5. சரியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்
தனது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பில்கேட்ஸ் கூறுவது பங்குதாரர்களையம் தன்னுடன் வேலை செய்தவர்களையும் தான். நீங்கள் உங்களுக்கான அணியினை உருவாக்கும்போது அதிலுள்ள ஒவ்வொருவரையும் அவர் உங்கள் தேவைகளிற்குப் பொருத்தமானவரா என்பதையும், அதே நேரம் அவர் உங்களுடன் ஒன்றி வேலை செய்வாரா என்பதையும் ஆராய்ந்த பின்னரே அணியில் சேர்க்கவேண்டும் என்கின்றார்.
6. அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள்
வெற்றியோ, தோல்வியோ எதையும் அதிகமாக அலட்டிக்கொள்ளாதீர்கள். எப்போதும் நகைச்சுவை உணர்வோடு இருங்கள். கோபம் பதற்றம் இவை உங்கள் வெற்றியை தடுத்துவிடக்கூடியவை. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வுகாணப் பழகுங்கள். அவற்றை உங்கள் தலைக்குள் அதிகமாகச் செல்லவிடாதீர்கள் என்கின்றார்.
வெற்றிக்கான வாய்ப்புக்கள் கடினமாக இருந்தாலும் கடின உழைப்போடு சிறந்த அறிவுரைகள் மற்றும் உடன் பயணிக்க சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் வாழ்க்கை என்றும் சிறக்கும் என்கிறார் பில்கேட்ஸ்.