சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு
கொரோனா பரவல் காரணமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சில மாற்றங்களை கொண்டு வந்தது.
இதன்படி, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுக்குப் பதில், இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்தன.
இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு களுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள், வரும் ஏப்ரல் 26ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே, அவர்களின் நிலையை கருத்தில் வைத்து, இரண்டாம் பருவ தேர்வுகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளுக்கு இடையில், கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.