அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் : தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநில பொது செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர்.ராஜேஸ் கண்ணா கூறியதாவது:
அதிகரித்து வரும் சர்க்கரை நோயின் தாக்கம், உயர் இரத்த அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள்,மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பக்கவாத்தின் அறிகுறிகள் தெரிந்த 4 1/2 மணி நேரத்திற்குள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கபட்டால் முழுமையாக குணப்படுத்தவோ அல்லது பாதிப்பின் தாக்கத்தை குறைக்கவோ முடியும்.
பக்கவாததின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பக்கவாதத்தை குணப்படுத்துதில் பிசியோதெரபி மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க பொது மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பெரும்பாலும் கிராமப்புற மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாள் முழுவதும் உடல் ஊனத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதேபோல் அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை அளிக்க ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் பக்கவாதத்தின் தாக்கத்தை கிராமப்புற பகுதிகளில் வராமல் தடுக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த அரசு ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி மருத்துவர்கள் இதுவரை நியமிக்கபடவில்லை. இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படுத்தபடுக்கையாகி இறந்து விடுகிறார்கள். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளும் ஒரு சில பிசியோதெரபி மருத்துவர்களே உள்ளனர். இவர்களால் அனைத்து நோயாளிகளுக்கும் தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் பக்கவாதத்தால் ஏற்படும் பெறப்பட்ட உடல் ஊனம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவலநிலை உருவாகிவிடும். எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் உடனடியாக பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்கவும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் பயிற்சி பிசியோதெரபி மருத்துவர்களை ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம்
ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பிசியோதெரபி மருத்துவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பிற மாநிலங்களை போல உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் பக்கவாத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் செய்து தரவும் பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை "வரும் முன் காப்போம்" மற்றும் "மக்களை தேடி மருத்துவம்" ஆகிய திட்டங்கள் மூலம் ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த "வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி பிரிவு தொடங்கப்படும்" என்ற அறிவிப்பை உடனே நிறைவேற்ற வேண்டும்.இதன் மூலம் தமிழகத்தில் பக்கவாதத்தின் தாக்கத்தை குறைக்கவும் குணப்படுத்தவும் முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.