40 ஆண்டுகளாக தண்ணீர் பம்ப் தயாரிப்பில் 100 கோடி வருவாயுடன் கோலோச்சும் கோவை நிறுவனம்!

ஆறுமுகத்தின் மாமா, கே.கே.வேலுசாமி, பம்ப்களுக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையைத் துவங்குமாறு ஆலோசனை கூறவே, 1981ல், இவர்கள் இருவரும், எம்.எஸ்.சுந்தரம் என்பவருடன் இணைந்து டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம், 9 ஊழியர்களுடன், சிறிய அளவில், விவசாயிகளுக்கான சப்மர்சிபில் பம்ப்களை தயாரிக்கத் துவங்கியது.
மெல்ல நிறுவனம், ஜெட் பம்ப், சபம்ர்சிபிள் மோட்டார், போர்ஹோல் சப்மர்சிபில்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளில் விரிவாக்கம் செய்தது.

ஆறுமுகம் இந்த குழுமத்தை முழுவதுமாக வாங்கி, தனி உரிமையாளரான நிலையில், நிறைய மாற்றங்களை சந்தித்து, ஹோல்டிங் நிறுவனமாக EKKI குழுமம் உண்டானது. இதில், Deccan Pumps, Deccan Enterprises, EKKI HOMA , EKKI Pumps உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கம் வகித்தன.
இந்த மாற்றங்கள், 2013ல் நிகழ்ந்தன. இன்று, நிறுவனம் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் கனிஷ்கா ஆறுமுகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நிறுவனம், பம்ப் உற்பத்தியாளர் என்பதில் இருந்து, தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகி இருப்பதாக இவர் கூறுகிறார்.
நிறுவன சி.இ.ஓவவான கனிஷ்கா, வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, போர்ப்ஸ் மார்ஷல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, 2015ல் தாயகம் திரும்பி குடும்பத் தொழிலில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தண்ணீர் தொழில்நுட்பம்
பம்ப் தயாரிப்பில் நீண்ட காலம் இருந்த நிலையில், EKKI இப்போது, தூய்மையான தண்ணீர் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார வசதியில் கவனம் செலுத்த இருப்பதாக கனிஷ்கா கூறுகிறார்.
நகரமயமாக்கல், தண்ணீர் பற்றாக்குறை, எரிசக்தி பற்றாக்குறை, உலகமயாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவறை இதற்கான காரணம் என்கிறார். தண்ணீர் தொழில் மாறுவதற்கு ஏற்ப பம்ப்களும் மாற வேண்டும் என்கிறார்.
ஜெர்மனி தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமான, HOMA Pumpenfabrik GmbH, நிறுவனத்திடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் EKKI HOMA எனும் கூட்டு நிறுவனம் உண்டானது. இந்நிறுவனம், இந்தியாவிற்கு கழிவு நீர் அமைப்பு தீர்வுகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கழிவுநீர் பம்புகளுக்கான உற்பத்தி ஆலை 2019ல் அமைக்கப்பட்டது.
இந்த கூட்டு நிறுவனம், இந்திய பொறியியல் ஆற்றலுடன், ஜெர்மனி தொழில்நுட்பத்தை இணைக்கிறது என்கிறார் கனிஷ்கா.
தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, நிறுவனம், EKKI International Water Technology Centre (EIWTC) மையத்தை, டாக்டர்.மகாலிங்கம் காலஜ் ஆப் இஞ்சினியரிங் & டெக்னாலகி மற்றும் கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் அமைத்துள்ளது.
“நவீன கால நுகர்வோர், ஜெர்மனி பொறியியல், ஜப்பானிய தரம், இத்தாலிய நேர்த்தி, அமெரிக்க மார்க்கெட்டிங், சீன விலை மற்றும் இந்தியாவின் விருந்தோம்பல் இணைந்த தயாரிப்பை எதிர்பார்க்கின்றனர்,” என்கிறார் கனிஷ்கா.
சர்வதேச அளவில் போட்டித்திறனுடன் விளங்க, விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறுகிறார். குடும்பத்தொழிலாக இருப்பதால், மார்கெட்டிங்கில் முதலீடு செய்ய தந்தை மற்றும் இயக்குனர் குழு மூத்த உறுப்பினர்களை சம்மதிக்க வைப்பது சவாலாக இருக்கிறது என்கிறார்.
தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் 2016 ல் நிறுவனம் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்தது.
நீடித்த வளர்ச்சி
இந்திய பம்ப் சந்தை, 2021-26 ஆண்டுகளில் ஆண்டுக்கு 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என ரிப்போர்ட் லிங்கர் தெரிவிக்கிறது. இது 1.51 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஎஸ்பி பம்ப்ஸ், ரோடோ பம்ப்ஸ், கிர்லோஸ்கர் பம்ப்ஸ், ஹேவல்ஸ் உள்ளிட்டவை இந்தியாவிலும் முத்திரை பதித்திருந்தாலும், தண்ணீர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் EKKI தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது.
INSEAD Business School, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை தனது எம்பிஏ பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. குழுமத்தின் வளர்ச்சி நீடித்த நிலையான வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வுடனும் இணைந்திருப்பதாக கனிஷ்கா கருதுகிறார்.
குறைந்த எரிசக்தியில் அதிக தண்ணீர் என்பது எதிர்காலத் தேவையாக இருக்கும் என்கிறார். இண்டெர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனல்டிக்ஸ் போன்றவை மூலமே இது சாத்தியம் என்பவர், தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்த துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்.

தற்போது, விவசாயம், கட்டுமானம், பொது பயன்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு நிறுவனம் சேவை அளித்து வருகிறது. அனைத்து பாகங்களும் நிறுவனத்தாலேயே சொந்தமாக தயாரிக்கப்படுகின்றன.
“நாங்கள் இந்தியாவில் முழுவதும் உற்பத்தி செய்யும் பிராண்டாக இருக்கிறோம். வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை எல்லாவற்றையும் சொந்தமாக செய்கிறோம். இதன் மூலம் சப்ளை சைன் மற்றும் தரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடிகிறது,” என்கிறார்.
நிறுவனம் கோவையில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இதன் இயந்திரங்கள் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நிறுவனத்தில் 550 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மொத்த வருவாய் ரூ.100 கோடியாக இருக்கிறது.
மாற்றம்
நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. துவக்கத்தில் நிதி பெறுவது பெரும் சிக்கலாக இருந்ததாக கனிஷ்கா கூறுகிறார். இன்றைய சவால்கள் வேறு விதமாக இருக்கின்றன.
“அடுத்த தலைமுறை மிகவும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். புதுமையாக்கம் மற்றும் மாற்றம் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியாது,” என்கிறார்.
கொரோனா பாதிப்பு பற்றி குறிப்பிடும் போது, “கடந்த ஆண்டு திட்டமிட்டிருந்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. பொதுமுடக்கத்தின் போது ஒரு மாத விற்பனை பாதிக்கப்பட்டது. எனினும் பொதுமுடக்கத்திற்கு பின் விற்பனை சீரானது,” என்கிறார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், முழுமையாக தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக மாற விரும்புவதாகக் கூறுகிறார். இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் அதிக டீலர்களை பெறவும் திட்டமிட்டுள்ளது.