• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES



    இன்று தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்தல் குறித்தும் ஒவ்வொரு வாக்காளரின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை ஆண்டுதோறும் மேற்கொண்டுவருகிறது மத்திய அரசு. அதன் ஓர் அங்கம்தான் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாகக் கடைப்பிடிப்பது. 18 வயது நிரம்பிய எந்த ஓர் இந்தியக் குடிமகனும், தேர்தலின்போது வாக்களிக்க முழு உரிமையுடையவர் ஆவார்.
    வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை, தேர்தலின் அவசியத்தை எல்லோருக்கும் உணர்த்துவதே இதன் நோக்கம். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்குதல், வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் எனப் பல்வேறு புதுமைகளைப் புகுத்திவருகிறது தேர்தல் ஆணையம்.

    வரக்கூடிய தேர்தல்களை மக்களாகிய நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்தலின்போது மக்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும், வளரும் சமுதாயத்தினரின் வாக்குரிமைகளை நிறைவேற்ற இருக்கும் எளிய வழிமுறைகள் எவை, ஐந்தாண்டு காலம் நம்மை ஆளக்கூடிய அரசியல் ஆளுமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற பல கேள்விகளுக்கு உரிய பதிலை தேடிச் செல்வதன் அடையாளத் தேதியே ஜனவரி 25. மேலும், 18 வயது நிறைந்த ஒவ்வொருவரின் வாக்குரிமையும் முழுவதுமாக நிறைவேற்றி, எதிர்கால இந்தியாவை பலப்படுத்துவதற்கான தொடக்க நாளே தேசிய வாக்காளர் தினம்.
    இந்திய வாக்காளர்களுக்கு, பல்வேறுவிதமான வாக்கு உரிமைகள் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி, குற்ற வழக்குகள், சொத்துகள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள வாக்காளருக்கு முழு உரிமையுண்டு. பணம் கொடுத்து தனக்கு வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வேறு ஒருவருக்கு வாக்கு அளிக்கக் கூடாது எனக் கட்டளையிடவோ இந்திய ஜனநாயகத்தில் இடமே இல்லை. நம் உரிமை நம் ஓட்டு என்பதற்கிணங்க, நம்மையும் நம் நாட்டையும் ஆளக்கூடிய நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே, நமக்கான நல்ல பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது. 

    அதிகாரமும் ஆட்சியும் பணம் படைத்தவர்களின் கையில் இருக்கும் வேளையில், நம்பிக்கையின் அடிப்படையிலும், சாதி, இன, பேதம் பார்க்காமல் சமூகத்தை உயர்த்துவதற்கான உயர்ந்த தலைவனாக ஒருவரைத் தேர்தெடுத்த மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காதபோது, வரக்கூடிய தேர்தல்களில்கூட மக்கள் யாரை நம்பி வாக்களிப்பார்கள்? இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில்தான், தனக்கான உரிமையைப் பறைசாற்றக்கூடிய தினமாக ஜனவரி 25-ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  
    இன்றைய அரசு நடைமுறைகளில் நாளைய அரசாங்க நடைமுறையை நிர்ணயிப்பது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளே தவிர, மக்கள் அல்ல என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. `எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளிஎன முடிவெடுப்பது போன்றதுதான் ஒவ்வொரு வாக்காளரின் இன்றைய நிலை. தன் அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள், வாக்காளர்களே. நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர்.  இந்தப் பாட்டாளி வர்க்கத்தினரை ஒன்றுசேர்த்து, அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனிமனித உரிமைகளுக்கும் தரமான செயல்முறைகளுக்கும் வழிவகை செய்து, எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ அவரைத் தேர்த்தெடுத்தால்தான், எதிர்கால இந்தியா ஏற்றம் மிகுந்ததாக அமைக்க முடியும்.
    தேர்தலின்போது, அடிதடி, கள்ள ஓட்டு போடுவது போன்றவையே பிரதானமாக இருந்தன. விலை மதிப்பற்ற வாக்குகளை விற்பது, நாட்டையே விற்பதற்குச் சமம் என்பதை நீங்கள் அறிவீர். வாக்குரிமை எனும் சக்தியால் பலம் வாய்ந்த அரசுகளும், தலைவர்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்; புதிய சட்டங்கள் பிறந்திருக்கின்றன; பல சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த முறை மக்களிடம் போய் ஓட்டு கேட்க வேண்டும் என்ற கட்டாயத்தால்தான் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துவிடுகின்றன. 18 வயது நிறைந்த வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும் தங்களுக்குக் கொடுக்கப்படும் பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல், தங்களின் வாக்குரிமை எனும் கருவியைப் பயன்படுத்தி இந்தியாவை மாபெரும் ஜனநாயக நாடாகக் கட்டமைத்திட, இந்நாளில் உறுதியேற்போம்!


    A call-to-action text Contact us