கோவை,
அனைவருக்கும் உள்ள உயிர்த்
தேவையான உணவிற்கு, உழவே காரணம். இயற்கை
வேளாண்மையை ஊக்குவிப்பதும், இயற்கை வேளாண்மை சார்ந்த
அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நோக்கில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டாக
வேளாண் திருவிழா “20” துவங்கியுள்ளது.
ஜனவரி 3,4,5
மூன்று நாட்கள் பிரம்மாண்ட
விழாவாக நிகழும் இந்த வேளாண் திருவிழா ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்
கல்லூரியின் வளாகத்தில் ஜனவரி 3-ம் தேதி 108 பசு பூஜை மற்றும் பொங்கல்
விழாவுடன் துவங்கியது.
ஜனவரி 4 –
வேளாண் திருவிழா துவக்கம் மற்றும் கால் நடைக் கண்காட்சி இரண்டாவது நாளான ஜனவரி 4 ஆம் தேதி
சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கியது. காலை ஸ்ரீசக்தி
கலையரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகத்தின் வேளான் வணிக தொழில்நுட்பக் காப்பகத்தின் தலைமை செயல் அதிகாரி
ஏ.வி.ஞானசம்பந்தன் கலந்து கொண்டார். துவக்க விழாவில் இயற்கை விவசாயிகளான
அரசூர் ராமசாமி, ஞான சரவணன், சரோஜா தேவி ஆகியோருக்கு விருதுகள்
வழங்கி கெளரவித்தார்.
விழாவில் அவர் பேசும் போது, தமிழ்நாடு
வேளான்மைப் பல்கலையில் 50 க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன. இதில்
விவசாயிகளை தொழில்முனைவோராக்கும் முயற்சியில் செயல்படும் முக்கியமான துறை வேளான்
வணிக தொழில்நுட்பக் காப்பகம். வேளான் சார்ந்த தொழில்களுக்கான ஆலோசனைகள், வேளான் சார்ந்த
புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்தலுக்கான
பயிற்சிகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்குகிறோம்.
மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுதல், வங்கிக் கடன்
வசதியையும் ஏற்படுத்தித் தருகிறோம். இந்த வாய்ப்புகளை விவசாயம் செய்பவர்களும், தொழில்முனைவோராக
விரும்பும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் மாணவர்கள் விவசாயம்
சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தி வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியும்
வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் விளைபொருட்களை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட
பொருளாக மாற்ற வேண்டும். அப்போதுதான் விளைபொருட்களின் வாழ்நாளும், நல்ல லாபமும்
அதிகரிக்கும் என்று பேசினார். துவக்க விழாவில் கல்லூரியின் தலைவர் எஸ்.தங்கவேலு, முதல்வர்
பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கால்நடைக் கண்காட்சி
பசுமாடு, காளைகள்
மற்றும் எருமை மாடு ஆகியவை வயதுக்கேற்ப நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
வகைக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், காளை வகைகளில் மயிலைக் காளை, செவளைக் காளை, காரிக்காளை என்று பல்வேறு வகையான காளைகளுக்கும்
தனித்தனியே போட்டி நடைபெற்றது. உலகிலேயே
குட்டையான மாடுகளுக்கான கண்காட்சியும் நடைபெற்றது. சண்டைக் கிடா
மற்றும் வெட்டுவாய், கிளிமூக்கு, விசிறி வால் உள்ளிட்ட சண்டை சேவல்களுக்கான கண்காட்சியும் பரிசுப்
போட்டியும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் ஐநூறுக்கும்
மேற்பட்ட கால்நடைகள் கலந்துகொண்டன. வெற்றிபெற்ற கால்நடைகளுக்கு தங்க நாணயம்
மற்றும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
வேளாண் கண்காட்சி
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக விவசாயத்தை மேம்படச்
செய்யும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்ப மென்பொருள்கள், கருவிகள் வேளாண் வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்தியா முழுவதிலுமிருந்து கல்லூரி மாணவ, மாணவியரின்
வேளாண்மை சார்ந்த படைப்புக்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக 500
மாணவர்களுக்கும் மேல் பங்கேற்று, இறுதியாக 25 படைப்புக்கள்
மட்டும் வேளாண் கண்காட்சியில் செயல் விளக்கம் செய்யப்பட்டன. இவைகளில் சிறந்த படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள்
வழங்கப்பட்டன.
கருத்தரங்கம்
‘விவசாயிகளின்
இன்றைய நிலை’ குறித்த தலைப்பில் ராஜன் பாபு, (நேஷனல் ரூரல்
லைவ்லி ஹூட் மிஷன்), உரையாற்றினார். தூய்மை, இந்தியாவின் திறவுகோல் என்ற தலைப்பில்
இந்திர குமார், ஹோம் எக்ஸ்னோராவின் தலைவர் உரையாற்றினார்.
மேலும், மாலை 4 மணிக்கு ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய நடனங்களின் தாயகமாக விளங்கும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமிய
கலைஞர்கள் வேளாண் திருவிழாவில் பங்குகொண்டனர்.
ஜனவரி 5 ரேக்ளா போட்டிகள்
வேளாண் திருவிழாவின் மூன்றாம் நாளான நிறைவு நாளில்
முக்கியத்துவம் வாய்ந்த ரேக்ளா போட்டி மற்றும் நாட்டு நாய்கள் கண்காட்சியும்
நடைபெறுகிறது.