பிளாஸ்டிக் பொருட்களை மிகுதியாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனால், இந்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ல், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளை திருத்தியமைத்து, 50 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை தேசிய அளவில் தடைசெய்து உத்தரவிட்டுள்ளது. எனினும், இத்தடையானது தேசிய அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மட்டுமே பெருமளவு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதனை கடுமையாக கையாளும் விதமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து, 01.01.2019 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்குண்டான முன்னேற்பாடாக, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு 01.01.2019 முதல் பிளாஸ்டிக் மீதான தடை அமல்படுத்தப்படவுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி/மறுபயன்பாடு செய்வது மற்றும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல் ஆகியவை பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.