*டிராஃபிக் போலீஸுக்கு ஃபேன், பயோ டாய்லெட்டுடன்கூடிய நிழற்குடை!* - அசத்தும் தனியார் நிறுவனம்.
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பயோ டாய்லெட், ஃபேன், லைட் உள்ளிட்ட வசதிகளோடுகூடிய போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டிருக்கிறது.
*கோவை, அவினாசி சாலையில் உள்ள சி.எம்.சி சிக்னலில்* புதிதாக, போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. 4 லட்சம் மதிப்பீட்டில் 12 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அந்த நிழற்குடையில் கழிவறை வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஃபேன், லைட் உள்ளிட்ட வசதிகளும் அதில் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்று இந்தியாவிலேயே எங்கும் கிடையாது என்று சிலாகிக்கின்றனர் போலீஸார்.
இந்த நிழற்குடையை அவினாசி சாலையில் உள்ள 'பார்க்' நிறுவனம் தங்களது செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் முரளியிடம் பேசினோம், ``வெயில், மழை பாராது சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் டிராஃபிக் போலீஸாரின் பணி மிகவும் கடுமையானது. அதைச் செய்து பார்த்தால்தான் அதில் உள்ள சவால்கள் நமக்குத் தெரியும்.
அவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டுமென்றால் அருகே உள்ள ஏதாவது அலுவலகங்களை நாட வேண்டியிருக்கிறது. பெண் காவலர்களுக்கு இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கான முன்மாதிரியாகவே நாங்கள் இதைச் செய்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே போன்று கோவையின் முக்கிய சிக்னல்களில் கோவை மாநகரப் போக்குவரத்து போலீஸாரின் உதவியோடு இந்தப் பயோ டாய்லெட்டை எங்கள் நிறுவனம் சார்பாக நிறுவலாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.