• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கொங்கு மண்டலத்தின் தொழில் மேதை திரு எஸ்.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள்

    கோவை மாவட்டத்தில் உள்ள தென்சங்கம்பாளையம் கிராமத்தில் 1940-ல் பிறந்தார் டாக்டர் எஸ்.வி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் எஸ்.வி.பாலசுப்பிரமணியம். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். இவரது தந்தையார் வேதநாயக கவுண்டர். தாயார் சீரங்கம்மாள். வேதநாயக கவுண்டருக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. இரண்டாவதாகப் பிறந்தவர்தான் இந்த எஸ்.வி.பி. இவருக்கு அடுத்து நான்கு சகோதரர்கள் பிறந்தனர்.

    உடுமலைப்பேட்டையில் பள்ளிப் படிப்பை முடித்த எஸ்.வி.பி. கோவை அரசு கல்லூரியில் பி.காம் படித்தார். அந்த படிப்பை முடித்த கையோடு சார்ட்டர்டு அக்கவுன்டன்ஸி படிப்பை படிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பதினேழு வயதிருக்கும்போது அவரது தந்தையார் வேதநாயக கவுண்டர் காலமானார்.
    சார்ட்டர்டு அக்கவுன்டன்ஸி முடித்த கையோடு பொள்ளாச்சி மகாலிங்கத்துக்குச் சொந்தமான சக்தி சுகர்ஸ் நிறுவனத்தில் 1966-ல் இன்டர்னல் ஆடிட்டராக வேலைக்குச் சேர்ந்தார் எஸ்.வி.பி. தனது நுணுக்கமான பிஸினஸ் அணுகுமுறையால் படிப்படியாக முன்னேறி, 1974-ல் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் உதவித் தலைவர் பதவியை அடைந்தார். என்றாலும், தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற உந்துதல் எஸ்.வி.பி.யிடம் இருந்துகொண்டே இருந்தது. கொங்கு மண்டலத்து பிஸினஸ் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பது இயற்கையான விஷயம்தானே!

    1986-ல் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் எஸ்.வி.பி. ஈரோட்டுக்கு அருகே சத்தியமங்கலத்தில் முதல் சர்க்கரைத் தொழிற்சாலையைத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 1,250 டன் கரும்பை அரைக்கும் திறன் கொண்ட இந்த ஆலை. 2003-ல் இது 4,000 டன்னாக மாறியதோடு, 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தது.

    இரண்டாவது தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. 1992-ல் செயல்படத் தொடங்கிய இந்த தொழிற்சாலை ஆரம்பத்தில் 5,000 டன் கரும்பை அரைக்கும் திறன் கொண்டதாக இருந்தது. இன்றைக்கு அது 7,500 டன் கரும்பை அரைக்கும் திறன் கொண்டதாக மாறியிருக்கிறது.

    மூன்றாவதாக, கர்நாடக மாநிலம், கொள்ளேகால் தாலுகாவில் குந்தூரில் நாளன்றுக்கு 2,500 டன் கரும்பு அரவை செய்யும் மாதேஸ்வரா சுகர்ஸ் லிமிடெட் நிறுவனம் வாங்கப்பட்டு, 2007-ம் ஆண்டு இந்த நிறுவனத்துடன் மூன்றாவது யூனிட்டாக இணைக்கப்பட்டது.

    நான்காவது யூனிட் திருவண்ணாமலை மாவட்டம், கொழுந்தம்பட்டு கிராமத்தில் 2010-ல் தொடங்கப்பட்டது. நாளன்றுக்கு 5,000 டன் கரும்பு அரவை செய்வதோடு, 28.8 மெகாவாட் மின்சாரமும் இங்கு தயாரிக்கப்படுகிறது.

    சர்க்கரை உற்பத்தியில் இன்று தமிழகத்திலேயே புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் பண்ணாரி அம்மன் சுகர்ஸ், இந்த தொழிலோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆட்டோமொபைல், ஏற்றுமதி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கிரானைட், மருத்துவமனை, மின் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, போக்குவரத்து, கல்வி என பல துறைகளில் கிளை பரப்பி செழித்து வளர்ந்திருக்கிறது.

    பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கும் அதேநேரத்தில், மக்களின் நல்வாழ்வுக்கும் பல வகையிலும் சேவை செய்து வருகிறார் எஸ்.வி.பி. பண்ணாரி ரூரல் ஃபவுண்டேஷன் என்கிற பெயரில் இவர் நடத்திவரும் அமைப்பு, கிராம மக்களுக்கு கல்விச் சேவை செய்வதோடு, உடல்நலம் குறித்த விழிப்பு உணர்வையும் தந்து வருகிறது. சிறுதுளி அமைப்பின் மூலம் கோவையைச் சுற்றி நீராதாரத்தைப் பெருக்குவதிலும் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனம் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. விவசாயத் துறையில் இவரது சேவையைப் பாராட்டி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2005-ல் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இவருக்கு டாக்டர் பட்டம் தந்து கௌரவித்தது.

    கடும் உழைப்பும், வியாபார நுணுக்கமும் கொண்டவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள் என்பதற்கு எஸ்.வி.பி. ஒரு வாழும் உதாரணம்.
    A call-to-action text Contact us